ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட குழுவினர் சற்று முன்னர் புதுடெல்லியை சென்றடைந்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர்கள் இன்று இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2024 பொதுத்தேர்தல்களை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வுக்காக, இந்தியாவின் அயல்நாடுகள் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முஹம்மது முயிசு, சிசெல்ஸ் துணை ஜனாதிபதி அகமத் ஆபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா, மொரிசியஸ் பிரதமர் பிரவீந் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமால் தஹல் பிரசண்டா மற்றும் பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்வாறு பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளும் தலைவர்கள் இன்றைய தினம் மாலை இராஷ்டிரபதி பவனில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவினால் வழங்கப்படும் விருந்துபசாரத்திலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.