காசாவில் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டு நான்கு பணயக்கைதிகளை இஸ்ரேலிய படையினர் உயிருடன் மீட்டுள்ளனா்.
அதேவேளை இந்த நடவடிக்கையின் போது 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்தாண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி, இஸ்ரேலிலிருந்து ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகளில், 4 பேரையே இஸ்ரேல் இராணுவம் இவ்வாறு உயிருடன் மீட்டுள்ளது.
கடந்த 8 மாதங்களுக்கு மேல் தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில், இஸ்ரேல் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை இதுவென குறிப்பிடப்படுகின்றது.
எனினும், இந்த நடவடிக்கையின்போது, 200க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு பின்னர், இஸ்ரேல் மேற்கொண்ட மிகமோசமான தனியொரு தாக்குதல் இதுவென, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவின் மத்தியிலுள்ள அல்நுசெய்ரட் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்கள் வாழும் பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பணயக்கைதிகள் தொடர்மாடிக் குடியிருப்புகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது, இஸ்ரேலிய படையினர் கடும் தாக்குதலை எதிர்கொண்டதாகவும், இதனைதொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் வானிலிருந்தும் தரையிலிருந்தும் பதில் தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்ட, பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளமை தங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ள குறித்த அதிகாரி, அவர்களில் எத்தனை பேர் பயங்கரவாதிகள் என்பது தெரியாது எனவும், இஸ்ரேலின் விசேட படைப்பிரிவை சேர்ந்த ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் இராணுவம்,
மத்திய காஸாவிலிருந்து ஒரு பெண் உள்ளிட்ட 4 பிணைக் கைதிகளை தமது இராணுவம் மீட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட அனைவரும் நோவா இசை விழாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டவா்கள் எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சிக்கல் மிகுந்த நகரச் சூழலில், கடுமையான துப்பாக்கிச்சூடு தாக்குதல்களுக்கு இடையே, பகல் நேரத்தில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சா் யோவாவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.
இந்த மீட்பு நடவடிக்கை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில்,
பயங்கரவாதத்துக்கு இஸ்ரேல் பணிந்துவிடவில்லை என்பதை இந்த மீட்பு நடவடிக்கை எடுத்துக் காட்டுவதாகவும், எஞ்சியுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் இதேபோன்று மீட்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.