”ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதில் எந்தமாற்றமும் இல்லை. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.
அதேபோல் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 2 தேர்தல்க்ள பிற்போடப்பட்டுள்ளன. நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை பிற்போட்டது. மாகாண சபை நடத்தப்படாத போதிலும் மாகாண சபை நடவடிக்கைகள் மாகாண ஆளுநர்களினால் செயற்படுத்தப்படுகின்றன.
உள்ளுராட்சி மன்ற தேர்தலும் தொடர்ந்தும் பிற்போடப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் மாகாண சபை தேர்தல் அல்லது உள்ளுராட்சி மன்ற தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற ரீதியில் எந்தவொரு தேர்தலுக்கும் தயார். இந்த நாட்டில் தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு நாம் எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம்.
உரிய காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தேர்தல்கள் உரிய காலப்பகுதியில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெசில் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிவருகின்றார். ஆனால் எமது தரப்பு வேட்பாளரை இதுவரை தெரிவு செய்ய வில்லை” இவ்வாறு ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.