“அப்பிள் சாதனங்களுடன் தனது நிறுவனங்களுக்குள் யாரும் பிரவேசிக்க முடியாது” என உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அப்பிள் நிறுவனம் அண்மையில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் மென்பொருளை ஒருங்கிணைத்து தனது புதிய தயாரிப்புகளில் புகுத்தவுள்ளதாக அறிவித்தது.
குறிப்பாக, அப்பிள் சாதனங்களில் அப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன்.ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை தனது சாதனங்களில் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.
குறித்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவே எலோன் மஸ்க் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்” தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாத அப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ நிறுவனத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விடயத்தில் அக்கறை இல்லாமல் செயற்படுகின்றது.
வாடிக்கையாளர்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ. இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி அப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் வாடிக்கையாளர்களை விற்பனை செய்கின்றார்கள்.
ஒருவேளை அப்பிள் நிறுவனம் ஓபன் ஏ.ஐ தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் அப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும்.
அப்பிளின் செயல் ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறலாகும். எனது நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது அப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்” இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.