கிழக்கு ஆபிாிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (Saulos Chilima) விமான விபத்தில் உயிாிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா (Lazarus Chakwera) உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் துணை ஜனாதிபதியுடன் பயணித்த 9 பேரும் குறித்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேர் பயணித்த இராணுவ விமானமானது நேற்றைய தினம் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்காமல் மாயமானது.
இதனையடுத்து மாயமான விமானத்தைத் தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று விபத்துக்குள்ளான நிலையில் குறித்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விபத்தில் சிக்கி, துணை ஜனாதிபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக மலாவி ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், துணை ஜனாதிபதியின் மறைவிற்கு அந்நாட்டு தலைவர்களும் உலகத் தலைவர்களும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேர் பயணித்த ஹெலிகொப்டரானது கடந்த மாதம் 19 ஆம் திகதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.