வங்குரோத்து அடைந்த நாடுகள் மத்தியில் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்த நாடு இலங்கை என்பதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 9ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
இவ்வளவு குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை.
இதனை நாம் கண்கூடாக பார்த்துள்ளோம். நாட்டை முன்னேற்றப் பாதைக்கு ரணில் கொண்டு வந்துள்ளார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
வங்குரோத்து அடைந்த நாடுகள் மத்தியில் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்த நாடு இலங்கை என்பதை உலகமே ஏற்றுக் கொள்கிறது. உலகமே பாராட்டுகிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டிருப்பது பொருளாதார அதிசயம் என உலக நாடுகள் கூறுகின்றன.
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இவ்வளவு சீக்கிரம் மீட்டெடுத்த நாட்டை நாங்கள் பார்த்ததில்லை என்கிறார்கள். சர்வதேச நாணய நிதியம் ரணிலை பாராட்டுகின்றது.
ஆனால் நம் நாட்டு மக்கள் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
நாட்டின் தற்போதைய உண்மை நிலையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.