திமுக மாணவரணி சார்பில் 24ம் திகதி நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில் , குறித்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக மாணவரணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி , திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பரீட்சை வினாத்தாள் வெளியானதாக பீகார் பொலிஸார் தெரிவித்திருந்ததும் நீட் தேர்வை மீள நடத்த வேண்டும் என தெரிவிப்பதற்கு முக்கிய காரணங்களாகும்.
மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே , திமுக மாணவரணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன பேரணி முன்னெடுக்கப்படவிருந்தது. எனினும், தற்போது பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் , திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீட் வினாத்தாள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 32 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று பீஹாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.