சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசை நடத்தக் கோரிய தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளும் விவாதம் நடத்திய பிறகு வாய்மொழி வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு சட்டமூலம் நிலுவையில் இருப்பதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்றும் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி நேற்று முன்தினம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை சட்டப்பேரவையில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தக் கோரி தனித் தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, ”சட்டப்படி மத்திய அரசுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும். சில புள்ளி விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது என்பதால், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும்.” என்று முதல்வர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.