இந்திய மீனவர்களைக் கைது செய்ய முற்பட்ட போது இலங்கைக் கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தை இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு இலங்கை அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் ஆகியோருக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்கள் அனுபவித்து வரும் பல பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் இலங்கை உயர்ஸ்தானிகர் இந்தியாவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இரு நாட்டு கடற்றொழில் அமைச்சுக்களை தொடர்பு கொண்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தாம் வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 214 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 28 என்றும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய – இலங்கை கடல் எல்லைகள் 1974 இல் பிரிக்கப்பட்ட நிலையில், 1979 ஆம் ஆண்டில், வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2018 ஆம் ஆண்டு மீண்டும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு அர்த்தமுள்ள வகையில் இதுவரை செயல்படுத்தப்படுகிறது.
ஆனால் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் பல வருடங்களாக பாரிய பிரச்சனையாக காணப்படுகின்ற போதும் இதுவரை உரிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என்பதும், இவர்களின் அத்துமீறல் காரணமாக வருடத்திற்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.