நேற்று முன்தினம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, நேற்று முன்தினம் இரவு மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய படகொன்றினை இலங்கை கடற்படையினர் வழிமறித்திருந்தனர். அத்துடன் படகில் இருந்தவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை இலங்கை கடற்படையின் மாலுமி உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும், கடற்படை சிறப்பு மாலுமியான குருநாகல் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ரத்நாயக்க என்பவரே உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்ததை அடுத்து, அவர்களை யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்திய பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கையுடன் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினர்.
இதனையடுத்து படகினை ஆபத்தான முறையில் செலுத்தி கடற்படை மாலுமிக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் 10 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 214 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.