அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நாளை உள்ளூர் நேரடி இரவு 9 மணிக்கு ஜோர்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும் போட்டியிடவுள்ளனர்.
இத்தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
இதன்போது குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள், ரஷ்யா உக்ரேன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 90 நிமிடம் இவ் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.