நாளை முதல் பேருந்துக் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாகவும், எனவே பயணிகள் சில்லறை நாணயங்களைக் கைவசம் வைத்திருக்கவேண்டும் எனவும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக கொழும்பில் கடந்த 28ஆம் திகதி இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ”அரசாங்கம் உறுதியளித்ததை போன்று, இன்று நள்ளிரவு முதல் டீசல் விலை குறைக்கபடுமாயின் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியும்” என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கருத்துத் தெரிவிக்கையில் ” தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் பிரகாரம் இதனை நாம் நடைமுறைப்படுத்துகின்றோம். பேருந்து கட்டணம் 5.27 சதவீதமாக குறைக்கப்படும்.
இதன் காரணமாக நாளை தொடக்கம் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 28 ரூபாவாக மாறியுள்ளது.
எனவே மக்களிடம் நாங்கள் ஒரு சிறப்பு வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்கிறோம். இன்று நள்ளிரவு முதல் அரசு தரப்பு கூறும் விதத்தில் டீசல் விலை குறையுமாயின் பேரூந்து கட்டணமும் குறையும். பேருந்துக் கட்டணக் குறைக்கப்படுகின்ற பலாபலனை 100 வீதம் பயணிகள் பெற வேண்டுமானால், அவர்கள் சில்லறைப் பணத்தை கொண்டு வர வேண்டும்.
இல்லையெனில், 30 ரூபாயாக இருந்த பேருந்துக் கட்டணம் 28 ரூபாய்க்கு மாற்றப்பட்டாலும் பிரச்சினைகள் தோன்றும். பின்னர் இந்த இரண்டு ரூபாய் பிரச்சினை இருக்கும், மேலும் ஒவ்வொரு கட்டணத்திலும், இந்த இரண்டு, மூன்று மற்றும் ஐந்து ரூபாய் போன்ற நாணயங்களை மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும் சாத்தியமே உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.