அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) நாட்டுக்கு வருகைத் தந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஐக்கிய அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி Mr. Andrew Shinn ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இரு தரப்பினரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
விசேடமாக அரசாங்கத்தின் வரிக் கொள்கையினால் நாட்டு மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு தெளிவூட்டினார்.
மேலும், தேர்தல்கள் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படுவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் ஆசியாவிற்கான பிரதி உதவிச் செயலாளரிடம் கருத்து வெளியிட்டார்.
இச்சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், இராதாகிருஷ்ணன், நிரோஷன் பெரேரா மற்றும் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.