பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூா் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் பயணித்த வேளை, மாலை 6.40 மணியளவில் 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 பேரின் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதலில், தலை, கழுத்துப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் , வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் சடலம் உடல்கூறு ஆய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அண்ணா நகர் பொலிஸ் நிலையத்தில் 8 பேர் நேற்று நள்ளிரவு கொலையுடன் தொடர்பு பட்டுள்ளதாக கூறி சரணடைந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என இந்திய ஊடகங்களுக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் , தமிழக முதரமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.