வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது.
இன்று (06) முதல் தினமும் பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளுடனான ஊர்வலம் நடைபெறவுள்ளதுடன், 21ஆம் திகதி இறுதிப் பெருவிழா நடைபெறவுள்ளது. பின், 22ம் திகதி காலை, மாணிக்க கங்கையில் தீர்த்தோற்சவத்தையடுத்து , உற்சவம் இனிதே நிறைவடையும்.
திருவிழாக் காலங்களில் கதிர்காமத்துக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பொது வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட ஆணையாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளதுடன், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை முதல் ஜூலை 22ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.