வடக்கில் உள்ள மக்கள் அரச சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று நாடு பாரிய ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் சம்பள அதிகரிப்பு கோரி போராட்டத்தில் ஈடுபடுவதுடன், நாட்டின் பொருளாதார நிலை தெரியாது இவ்வாறு நடந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் வடக்கில் உள்ள மக்கள் வித்தியாசமாக சிந்திக்கின்றார்கள். தமக்கு கிடைக்க வேண்டிய அரச சேவைகள் தொடர்பில் வழிப்புடன் நடந்து கொள்கின்றார்கள். தமக்கு கிடைக்க வேண்டிய சேவைகளை தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக அறிந்து கொள்வதுடன், அந்த விடயம் தொடர்பில் மாற்று சிந்தனையுடன் செயற்படுகின்றார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் பாதாளத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் அரச உத்தியோகத்தர்களும் உணர்ந்து செயற்பட வேண்டும். பொது மக்கள் வடக்கில் விழிப்பாக செயற்படுவது போன்று நாடு முழுவதும் உள்ள மக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும் என்பதுடன், தமக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் கிடைக்கின்றனவா என மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் வெர் தெரிவித்தார்.
நாடு அதாள பாதாளத்தில் இருந்த போது, வெளிநாடுகளிலிருந்து நாட்டை மீட்க வேலைவாய்ப்புக்களை பெற்று சென்ற மக்களே செயற்பட்டனர் எனவும், அவர்கள் உண்டியல் மூலமாக பணத்தை அனுப்பாது நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு டொலர்களாக அனுப்பியதால், இன்று அவர்களின் பெரும்பான்மையான பங்களிப்பாலேயே நாடு நிமிர்ந்து வருகின்றது எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.