காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இடம்பெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31-ம் திகதி வரை திறந்துவிட வேண்டும் எனவும், பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது.
எனினும், காவிரி ஒழுங்காற்று குழுவின் இந்த அறிவிப்பிற்கு கர்நாடக விவசாய சங்கத்தினரும், கன்னட அமைப்பினரும் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவது குறித்து முடிவு எடுப்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியிருந்தார்.
குறித்த கூட்டத்தில், துணை முதல்வரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், சமூக நலத்துறை அமைச்சர் ஹெச்.சி.மகாதேவப்பா, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்ததுடன், காவிரி நீரை திறந்துவிடுவது குறித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது.
குறித்த கூட்டத்துக்கு பின்னர் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தமிழகத்துக்கு 1 டிஎம்சி நீரை திறந்துவிடுவதில்லை என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.