காணிப் பிரச்சினை மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது எனவும் நாட்டில் காணப்படும் பெரும்பாலான நீதிமன்றங்களில் நிலம் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நிலம் தொடர்பான வழக்குகளை தீர்க்கப் பல ஆண்டுகளாக மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்தப் பிரச்சினைகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக உறுமய வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்தார். இந்த பிரதேசத்தில் காணி அமைச்சர்களும் இருந்தனர்.
ஆனால் அவர்களால் மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை.
குறைந்த பட்சம் இந்த பிரதேசத்தில் இருக்கும் ஜே.வி.பி.யின் தலைவரால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. 1988-1989 இல் ஜே.வி.பி ஏற்படுத்திய அழிவு இந்த நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது.
இந்த ரஜரட்ட பிரதேசத்தில் இருந்துதான் நாட்டுக்கு அரிசி வழங்கப்படுகிறது. 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மொரகஹகந்த திட்டத்தில் இருந்தும் ரஜரட்டவுக்கு இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே ரஜரட்ட பிரதேசத்துக்கு நீரைப் பெற்றுக்கொடுக்கும் அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” இவ்வாறு எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.