Update:
தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது! -தேர்தல்கள் ஆணைக்குழு
18 வயதைப் பூர்த்தி செய்த அனைவருக்கும் தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பிரகாரம் 1 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதுவரை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம் .எல். ஏ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ”தேர்தல் கடமைகளுக்கு பயன்படுத்தப்படும் மத்திய நிலையங்கள் தொடர்பாக அரச அச்சகம், பொலிஸ் திணைக்களம், தபால் மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருடன் தாம் கலந்துரையாடிவருவதாகவும், நாளை நிதியமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் போக்குவரத்து, நீர், மின்சாரம் போன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் தாம் கலந்துரையாடி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
…
”செப்டெம்பர் 17 ஆம் திகதிக்குப் பின்னர் பொருத்தமான ஒருநாளில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்” எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம் .எல். ஏ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தல்கள் ஆணைக்குழுவில் 5 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சமூகத்தில் பாரிய எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது.
இந்த நாட்டில் பல தடவைகள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றுள்ள போதிலும் இம்முறை பாரிய எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது.
அரசியலமைப்பின் பிரகாரம் செப்டெம்பார் 17 முதல் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே 63 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் திகதியை தீர்மானிக்கையில் வேட்புமனுதாக்கல் செய்வது முதல் பிரசாரங்களை மேற்கொள்ள வேட்பாளர்களுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கும் கால அவகாசம் தேவைப்படுகின்றது. இவை அனைத்தையும் கருத்திற்கொண்டே திகதி தீர்மானிக்கப்படும்.
இந்த மாதம் நிறைவடைவதற்குள் தேர்தல் நடத்தப்படும் திகதியை நாம் அறிவிப்போம். தேர்தல் திகதியை தீர்மானிப்பதற்கு வேறு எந்த இடையூறுகளும் இல்லை. தேர்தல் திகதியை தீர்மானிப்பதில் நாம் பாரபட்சமாக செயற்படவில்லை. அரசியலமைப்பின் பிரகாரமே செயற்படுவோம்.செப்டெம்பர் 17 ஆம் திகதியின் பின்னர் பொருத்தமான ஒருநாளில் தேர்தல் நடத்தப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் இன்று நள்ளிரவுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறுகின்ற நிலையிலேயே இன்றைய தினம் குறித்த விசேட ஊடக சந்திப்பு இடம்பெற்றிருந்தது.