ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா 19 வயதான பெண்ணின் தலையில் இருந்து 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன.
சில காலங்களாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். அதன்பிறகு சில காலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரெஷ்மா வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு மருத்துவமனையில் ரெஷ்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அதில் ரெஷ்மா தலையில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரெஷ்மா தலையில் இருந்து முதற்கட்டமாக எட்டு ஊசிகள் எடுக்கப்பட்டன. எனினும், அவரது உடல்நிலையில், மாற்றம் இல்லாததால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் ரெஷ்மா தலையில் இருந்து மொத்தம் 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது நலமுடன் இருக்கும் ரெஷ்மா அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பரிசோதனைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.
“இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகளின் மூலம் 77 ஊசிகள் பெண்ணின் தலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக ஊசிகள் எதுவும் எலும்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தவில்லை. மாறாக தசை பகுதியில் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது,” அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரெஷ்மா போன்று வேறு யார்யார் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறித்து காந்தபாஞ்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.