பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தியது சர்வதேச ரீதியில் பேசு பொருளாகியுள்ளது.
இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு நாடு முழுவதும் வன்முறை வெடித்து, அரசு தொலைக்காட்சி நிலையத்துக்கு தீவைக்கப்பட்டது. தலைநகர் டாக்காவின் வடக்கே அமைந்துள்ள நர்சிங்டி நகரில் உள்ள சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை தொடர்ந்து, சுமார் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வராததால் நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. அங்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. வன்முறையில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்ப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், ஊரடங்கை மீறி வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.