நாடாளுமன்றத்தில் தன்னைச் சந்திக்க வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக, காங்கிரஸ் எம்பியும், எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக தனி நபர் மசோதாவொன்றைக் கொண்டு வருவது தொடர்பில் ராகுலைச் சந்திக்க 7 விவசாய சங்கங்களின் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
குறித்த சந்திப்பானது நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான அனுமதி திடீரென மறுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ராகுல் காந்தி கருத்துத் தெரிவிக்கையில்”
விவசாய சங்கத் தலைவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எனது அலுவலகத்தில் சந்திக்க அழைப்பு விடுத்தேன்.
அதற்கான அனுமதியும் முதலில் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. என்ன செய்வது? இதுதான் இங்கு காணப்படும் பிரச்சினை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 15ஆம் திகதி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட உள்ளதாகவும், புதிய குற்றவியல் சட்டங்களின் நகல்களை எரிக்கவுள்ளதாகவும் விவசாய சங்கங்கள் தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.