அதிகபட்ச ஒப்பனைக் கலைஞர்களால் ஒரே நேரத்தில் கண் ஒப்பனை அலங்காரம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும், இலங்கையின் பல மாவட்டங்களிலிருந்தும் முன்னணி ஒப்பனைக் கலைஞர்களும் பயிற்சி பெற்ற ஒப்பனைக் கலைஞர்களும் மொடலிங் துறையைச் சேர்ந்த கலைஞர்களும் ஒன்று சேர்ந்து இந்த உலக சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
இந்த உலக சாதனை நிகழ்வானது அண்மையில் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமான முறையில் நிகழ்த்தப்பட்டது.
சாமுத்ரிகா மேக்கப் ஸ்டுடியோ மற்றும் அகாடமியின் இயக்குநரான அனு குமரேசனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐக்கிய இராச்சியம், கத்தார் மற்றும் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 42 ஒப்பனை கலைஞர்கள் – இணைய வழியூடாகவும், நேரடியாகவும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் இலங்கையின் பல மாவட்டங்களிலிருந்தும் முன்னணி ஒப்பனைக் கலைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அந்தவகையில் மொத்தம் 257 ஒப்பனை கலைஞர்கள் 18 நிமிட நேரத்தில் பல் வேறு வகையான கண் அலங்காரத்தை ஒரே தடவையில் செய்து முடித்து குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
மேலும் குறித்த சாதனையானது “ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” இன் சாதனைப் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் திருமணமானவர்களுக்கான உலக அழகியும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான ரோசி சேனாநாயக்க அவர்களும், செயற்கை ஒப்பனை வடிவமைப்பாளரும் பாலிவுட் ஒப்பனை கலைஞருமான திரு. தோஷி அமோத் மோதிலால் மற்றும் AVS நிறுவனம் மற்றும் AV இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவரான திரு. டி. அமிர்தலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.