வடக்கு – கிழக்கில் தமிழர்கள், பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்கின்ற வரலாற்றை சிதைக்கும் வகையில், இன்று தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருவதாக வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 41 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, மன்னாரில், தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கலந்துக்கொண்டு உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், எமது ஒற்றுமை இன்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாம் இழந்து விடக்கூடாது என வலியுத்தியுள்ளார்.
மேலும், ஒர் இன அழிப்பின் ஆரம்ப இடம் வெலிக்கடை சிறைச்சாலை எனவும், ஒரு இனத்தின் மீது வன்முறைகள் ஆரம்பிக்கப்படுவது தான் இலங்கை வரலாற்றில் கூறப்படுகின்ற மிக மோசமான வன்முறையாகும் என தெரிவித்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு இளைஞர் யுவதிகள் தமது உயிரை எமது தேசத்திற்காக தியாகம் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு, மீண்டும் அகிம்சை ரீதியான போராட்டங்களினூடாக எமது இனத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் கால கட்டத்தில் தாம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எமது மக்களின் நிலங்கள், கடல் வளம், மண் அபகரிக்கப் படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், எமது ஒன்றுமை இன்மையால், தென்னிலங்கையில் உள்ளவர்கள், வடக்கு கிழக்கில் ஆட்சி நடத்தக்கூடிய அல்லது அவர்களின் செயல்பாட்டை இங்கு திறம்பட செயற்படுத்தக்கூடிய வாய்ப்பை வழங்கி வரும் நிலைப்பாட்டிலேயே தாம் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களின் விடுதலைக்காகவும், மக்கள் விரும்புகின்ற ஒற்றுமையை பேணி மக்களுக்காக குரல் கொடுக்கும் எமது மண்ணை மீட்டெடுக்கும் தார்மீக செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.