சவால்களில் இருந்து தாம் ஒருபோதும் பின்வாங்கவில்லை எனவும், பேசிகொண்டிருக்காது கடமைகளை நிறைவேற்றுவதே தனது அரசியல் கொள்கை என்பதால், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
காலி நகர சபை மைதானத்தில் நடைபெற்ற ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
நீண்ட நேரம் பேசுபவன் நான் அல்ல என்பதுடன் ஒரு வேலையை ஏற்றுகொண்டால் அதனை செய்து முடிப்பேன் எனவும் கஷ்டமான காலத்திலேயே நாட்டை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் பல பிரச்சினைகள் இன்றும் உள்ளதுடன், மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் வங்கிகளில் நகைகளை அடகு வைக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வுகளை வழங்கி வருவதாகவும் பொருளாதாரம் வலுவடையும் போது எமது கஷ்டங்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு மக்களின் கஷ்டங்களைக் கண்டு கவலைப்படுவதாகவும் அதனை நிவர்திக்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முடிந்த வகையில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகள் கிராமங்களாக மாற்றப்படும் எனவும் பொது மக்களுக்கு உரிமை வழங்குவதே எனது நோக்கம் என்பதால் அதனை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் கடன் வழங்கிய நாடுகளின் நிபந்தனைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டிய அவசியம் உள்ளதால் அவற்றை சிதைத்துவிட்டு செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமக்கு இப்போது கிடைக்கும் நிதி கிடைக்காவிட்டால் மீண்டும் வரிசையில் நிற்கும் நிலை வரும் என்பதால் அரசியலுக்காக பொய்களைச் சொல்லி நாட்டை மீண்டும் வீழ்த்த வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறான பயணத்தை முன்னெடுக்கவே இன்று நான் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியிருப்பதாகவும் பழைய அரசியல் முறையிலிருந்து நாம் விடுபட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
10 வருடங்களில் இந்த நாட்டை சிங்கப்பூரை போல கட்டியெழுப்ப முடியும் என்பதால் அதற்கான பயணத்தில் ஒன்றிணைந்து செல்வோம் எனவும் ஜனாதிபதித் தெரிவித்துள்ளார்.