காசா பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ள நிலையில், அதனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்குப் விஜயம் செய்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமரின் அமெரிக்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீதிகளில் ஆயிரக்கணக்கான பலஸ்தீன ஆதரவாளர்கள் திரண்டு அவரது உருவ பொம்மை மற்றும் அமெரிக்கக் கோடியை எரித்து போராட்டம் நடத்தியிருந்ததாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்த பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து காசா போர் குறித்து பேச்சுவார்த்தை நடந்தியுள்ளார்.
காசா விடயத்தில் அமைதி பேச்சுவார்த்தையை விரும்புவதாக அமெரிக்கா கூறி வந்தாலும் இஸ்ரேலுக்கு அதிகளவில் அமெரிக்கா நிதி வழங்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்களுக்கான சாதக பாதகங்களைக் கணக்கில் வைத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டொனால்ட் ட்ரம்பையும் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பில் காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், காசா பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருமாறு இஸ்ரேல் பிரதமரிடம், டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாகவும் ஆனால் அதனை இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.