ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதேவேளை இன்றையதினம் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, வேட்பாளரை தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ரஜபக்சவிற்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
கொழும்பு – விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதற்கு முன்னரும் இவ்வாறான பல சந்திப்புகள் இடம்பெற்ற நிலையில் அவை இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்தன. அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராகத் தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமது கட்சியின் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று வெளியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.