இன்றைய நவீன காலத்தில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கின்ற ஏராளமான கண்டுபிடிப்புகள் புதிதாக உருவாக்கப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய மேலை நாட்டவர்களால் தயார் செய்யப்பட்டு, ஊடுருவ செய்கின்ற கார்ட்டூன் சேனல்கள், வீடியோ கேம்கள், செல்போன்களில் செயலிகள் மூலமாக உருவாக்கப்படுகின்ற விளையாட்டு கேம்கள் இதுபோன்ற பலதரப்பட்ட முறைகளின் வாயிலாக பலதரப்பட்ட பாதிப்புகள் உலக அரங்கில் பரவுகின்றன.
இதுபோன்ற கேம்கள், கார்ட்டுன் சேனல்கள் வெறுமனே பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டு அதுபோன்ற காரியங்களை அனுமதித்து வருகின்றோம்.
ஆனால் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் இதுபோன்ற பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையையும், சிந்தனைத் திறனையும் அழித்தொழிக்கின்றது.
சமீப காலமாக மேலை நாட்டவர்களால் செல்போன் செயலிகள் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு விளையாடக் கூடிய நூற்றுக்கணக்கான விளையாட்டுக்களை உலகம் முழுவதும் பரப்பி வெளியிடுகின்றார்கள்.
ஆனால் தயார் செய்யப்பட்டு வெளியிடுகின்ற விளையாட்டுக்களின் பாதிப்புகளையும், கேடுகளையும் அறியாமலும், உணராமலும் இருந்து வருகின்ற காரணத்தினால், இவற்றில் குறிப்பிட்ட சில விளையாட்டுக்கள் உலக அரங்கிலே மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டாகவும், மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற விளையாட்டாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
உதாரணமாக, “ப்ளு வேல்” என்ற விளையாட்டு ஆரம்பத்தில் மக்களிடத்தில் மிகவும் வேகமாக பரவினாலும், குறிப்பிட்ட சில நாட்களில் மனிதர்களின் உயிருக்கே மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கின்ற விளையாட்டாக மாறி, உலக அரங்கில் பலர் செத்து மடிந்து, பெருமளவில் பிரச்சனைகளை கிளப்பி, “ப்ளு வேல்” என்ற விளையாட்டு நாளடைவில் தடை செய்யப்பட்ட விளையாட்டாக ஆனது.
ஆனால் இந்த ப்ளு வேல் விளையாட்டையெல்லாம் பின் தள்ளி விட்டு உலக அரங்கில் இளைஞர்களிடத்தில் ஆக்கிரமித்திருக்கின்ற ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டு தான் பப்ஜி.
இந்த விளையாட்டில் அப்படி என்ன தான் இருக்கின்றது? என்று கேட்டால், பல நபர்கள் கூட்டமாக சேர்ந்து ஒருவர் மற்றவரை சுட்டுத் தள்ளுகின்ற விளையாட்டு தான் ஆனால் மற்ற கேம்களை போலல்லாமல் பப்ஜி சுவாரஸ்யமான விளையாட்டு என்று தெரிவிக்கின்றனர்.
ஒரே நேரத்தில் பல நூறு பேர் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைன் வழியாக விளையாடும் விளையாட்டு பப்ஜியாகும்.
சிலர் ஆர்வக் கோளாறின் உச்சகட்டத்திற்கு சென்று, படிப்பதை மறந்து விட்டு மணிக்கணக்கில் பப்ஜி விளையாட்டில் மூழ்கி திளைக்கின்றனர்.
சிலர் போனில் சார்ஜ் தீர்ந்து போனாலும், கைகளிலே பவர் பேங்க் உடனோ அல்லது சார்ஜ் ஏற்றியவாறே விளையாடி பப்ஜி போதையில் மூழ்கி விடுகின்றனர்.
மேலும் நாளுக்கு நாள் பப்ஜி விளையாட்டின் மோகம் அதிகரித்து பெருமளவிலான மக்கள் பப்ஜி கேமை விளையாடுவதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சுமார் 30 கோடி பேர் பப்ஜி விளையாட்டைப் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், ஒரே நேரத்தில் உலகளவில் சுமார் 5 கோடி பேர் விளையாடி வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய விளையாட்டுக்கள் அதிகமானளவில் பிள்ளைகள் மத்தியில் உலா வந்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறு வயதில் பிள்ளைகளின் மனமானது முறையாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தால் தான் அவர்களின் எதிர்கால கற்றல் செயற்பாடுகள் சிறப்பாக அமையும் எனலாம்.
பிரதிகூலங்கள்
- தனித்துவிடப்படுகின்ற நிலை உருவாகும்.
- உடல் உள விருத்தி பாதிப்படையும்
- மன அழுத்தம் ஏற்படும்
- தூக்கமின்மை
- முரண்பாடுகள் ஏற்படல்
- விரோதம் போன்ற குணங்கள் மனதளில் உருவாதல்
- கல்வியின் மீது ஈடுபாடின்மை
இத்தகைய நிலைப்பாடுகள் பிள்ளைகள் மத்தியில் ஏற்பட பிரதான காரணமாக இருப்பதே பெற்றோர்கள் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் பிள்ளைகளை சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுக்களின் ஊடான கல்வி செயற்பாடுகளில் ஈடுபட வழிவகுத்து தர வேண்டும்.
அதனால் அவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்த முன்பள்ளி செயற்றிட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். குழந்தைகள் ஏன் பாடசாலைக்கு செல்ல விரும்புவதில்லை என சிந்திக்க வேண்டும் பள்ளிகள் குழந்தைகளை என்ன செய்கின்றன என யோசிக்க வேண்டும்.
குழந்தைகள் மகிழ்ச்சியாக வந்து போக கூடிய இடமாக ஆரம்பக் கல்வியை மாற்ற வேண்டும்.
அதனை செயற்படுத்தி காட்டியவரே மரியா மாண்ட்டிசோரி ஆவார் நாம் மாண்ட்டிசோரி அல்லது நெர்ஸரி என்று அழைக்கும் இந்த ஆரம்பக் கல்வியை பாலர் கல்வி என்று விளக்கலாம்.
இதில் கல்வி முதன்மையாக இல்லை என்றாலும் கூட ஏதோ ஒன்றை தாம் விரும்பிய முறையில் கற்றுக்கொள்கிறோம் என்பதால் பாலர் கல்வி பிள்ளைகளை உருவாக்குவதில் பிரதான இடம் வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.