உள்நாட்டு கலவரம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவுக்கு தற்காலிகமாக தங்கும் அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது.
இங்கிலாந்து அரசிடம் அவர் தஞ்சம் கோருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்காலிகமாக தங்குவதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது.
இதேவேளை பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளார்.
இத்தனை கால கடின உழைப்புக்குப் பிறகு சிறுபான்மையினர் தனக்கு எதிராக திரும்பியதால் ஷேக் ஹசீனா மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாகவும் இனி அவர் அரசியலுக்கு திரும்பி வரமாட்டார் எனவும் சஜீப் வஜீத் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான படையினர் மற்றும் இராணுவத்தினர் அவருக்கு தகுந்த பாதுகாப்பை அளித்து வருகின்ற நிலையில், ஹிண்டன் விமானப்படை தளத்தில் ஷேக் ஹசீனாவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.