தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக இதுவரை 91 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக இதுவரை 91 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 46 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம், 2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இதுவரை 22 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் ஒருவரிடம் தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால், அவர் சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை பயன்படுத்தலாம் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு, அதனை பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர்கள் தமது பகுதிக்குரிய கிராம சேவகர்களை சந்தித்து, உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து, தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 11 கட்சிகளும் 10 சுயாதீன வேட்பாளர்களும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.