”பொலிஸ் வரலாற்றில் ரணில் விக்ரமசிங்கவே பொலிஸாருக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கியுள்ளார்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர விசேட அதிரடிப் படை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பொலிஸ் மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப் படைத் தளபதி ஆகியோருடன் சிங்கப்பூர் விஜயம் மேற்கொண்டிருந்த போது
இவ்வாறானதொரு கட்டளை செயற்பாட்டு மையம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம்.
சிங்கப்பூர் அரசாங்கம் அத்தகைய கட்டளைச் செயல்பாட்டு மைய செயல்முறையை எங்களுக்கு விளக்கியது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கப்பட்ட போது, இலங்கையிலும் அவ்வாறானதொரு கட்டளைச் செயல்பாட்டு மையம் ஒன்றை ஆரம்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது.
மேலும் அதற்காக இந்த இடம் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்டது. பொலிஸ் வரலாற்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே பொலிஸாருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் பொலிஸாருக்கான உணவு மற்றும் பராமரிப்பு கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணக் கொடுப்பனவு உயர்த்தப்பட்டது. மேலும் பொலிஸாருக்கு 500 புதிய ஜீப் வண்டிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பணிகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பின்னணியில் செய்யப்பட்டவை” இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.