பங்களாதேஷில் மாணவர்களின் போராட்டத்தின் போது நடந்த படுகொலை தொடர்பாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 10 பேர் மீதான விசாரணையை அந்நாட்டு நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.
பங்களாதேஷில், சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், 560 பேர் உயிரிழந்தனர்.
இதன் எதிரொலியாக பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அங்கு அமைந்தது.
ஜூலை முதலாம் திகதி முதல் ஆகஸ்ட 5ஆம் திகதி வரையிலான காலத்தில் நடத்தப்பட்ட கொலைகள் குறித்து, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்படும் என இடைக்கால அரசு அறிவித்திருந்தது.
போராட்டத்தின் போது, முகமதுபூர் பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில், மளிகை கடை உரிமையாளர் அபு சயீத் கொல்லப்பட்டது தொடர்பாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், மாணவர்களின் போராட்டத்தின் போது ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஆரிப் முகமது ஷயாம் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது தந்தை முறைபாடு செய்துள்ளார்.
அதில், மாணவர்கள் மீது அப்போதைய அரசு வன்முறை அடக்குமுறையை ஏவி விட்டதால், தன் மகன் உயிரிழந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இதன் விளைவாகவே பரவலான உயிரிழப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் அமைச்சர்கள் என, 10 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை, டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.