மன்னார் சோழமண்டல குளம் காணியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளதோடு, பணம் படைத்தவர்களுக்கு குறித்த காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் நேற்று ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மன்னார் சோழமண்டல குளம் காணி விடயம் தொடர்பாக பல முறை உங்களுக்கு கடிதம் எழுதி பயனற்றதாகிவிட்டதாகவும், 30 ஆண்டுகளாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் 100 ஏழை விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு பெரு வணிகர்களுக்கும் கொழும்பிலும் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் சட்ட விரோதமாக காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியின் பரிபாலனமின்றி அநீதியாக உங்கள் அமைச்சர்கள் சலுகை பெற்றுக் கொண்டு இக்காணியை வழங்கியுள்ளார்கள் என்பதே வெளிப்படையான உண்மை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அரசாங்க அதிபர் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பல தடவைகள் எழுத்து மூலமும் நேரடியாகவும் தெரிவித்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இதற்காக பல கூட்டங்களும் நடந்தேறியதாகவும், ஆனால் எங்கும் நீதி கிடைக்கவில்லை என்பதுடன் ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான காணியை அபகரித்தது அடிப்படை உரிமை மீறல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாழ்வுரிமையின் அடிப்படை உரிமை மறுக்கும் இந்த நாட்டின் நீதியற்ற நிர்வாக இயலின் ஜனாதிபதி தேர்தலை முழுமையாக புறக்கணிக்கணிப்பதாகவும், எந்த வேட்பாளருக்கும் நாம் வாக்களிக்க தயாராக இல்லை எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது அடிப்படை உரிமையை பெற முடியாத இந்த நாட்டில் குடியிருந்து என்ன பயன்? இந்த நூறு குடும்பங்களின் வாழ்வுரிமையை மறுக்கும் தங்களின் அரசு இவர்களை இந் நாட்டிலிருந்து நாடு கடத்தி விடுங்கள் எனவும், சமநீதி சமத்துவம் சமூக நீதி அடிப்படை வாழ்வுரிமை இல்லாத நாட்டில் வசித்து என்ன பயன்? பணம் உள்ளவர்கள் மாத்திரமே வாழலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மாத்திரமே இந்த அரசு சகல விடயங்களிலும் முன்னுரிமை வழங்குகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ் மக்களின் இனப் பிரச்சனை தீர்வு மட்டுமல்ல அடிப்படைப் பிரச்சனையும் புறக்கணிக்கும் தாங்கள் எப்படி பல்வகைமைச் சமூகத்தின் தலைவராக மிளிர்ந்து விட முடியும் என கூறப்பட்டுள்ளது.
எனவே இப்பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும், இல்லையேல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நாம் முழுமையாக புறக்கணிப்போம் எனவும் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.