எக்ஸ் சமூக வலை தளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில், பிரேசிலில் உள்ள எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
பிரேசிலில் எக்ஸ் வலைதளத்தில், முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெறுப்புணர்வு கருத்துக்கள், போலி செய்திகளை நீக்கும்படி எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நாட்டு உயர்நீதிமன்ற நீதிபதி அலெக்சான்டிரி டி மொரேஸ் உத்தரவிட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறில்லையென்நால் பிரேசிலில் செயல்பட்டு வரும் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சட்ட நிபுணர் கைது செய்யப்படுவார் என்றும் நீதிபதி மொரேஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையிலேயே பிரேசிலில் உள்ள எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, பிரேசிலில் அலுவலகத்தை மூடுவதற்கான முடிவு கடினமானது ஆனால் நீதிபதியின் ரகசிய தணிக்கை மற்றும் தனிப்பட்ட தகவல் பரிமாற்ற கோரிக்கைகளுக்கு நாங்கள் ஒப்புக்கொண்டிருந்தால், நாங்கள் விளக்கங்களை அளிக்க முடியாமல் போய் விடும் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவையடுத்து பிரேசிலில் செயல்பாடுகளை எக்ஸ் நிறுவனம் நிறுத்தி உள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மூடப்பட்டாலும் தொடர்ந்து எக்ஸ் வலைதள பக்கம் பிரேசிலில் செயல்பாட்டிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.