தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் ஜனாதிபதியையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்திருக்கின்றன. ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்புச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைப்பு விடுத்தார்கள். கட்டமைப்பாக அழைக்கவில்லை. ஆனாலும் கட்டமைப்பில் உள்ள பெரும்பாலானவர்களை அழைத்தார்கள்.ஆனால் பொதுக் கட்டமைப்பாக அழைக்கிறோம் என்று அழைப்பில் குறிப்பிடப்படவில்லை. எதற்காக அழைக்கிறோம் என்றும் இரு தரப்புமே கூறவில்லை.
இதில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் ஏழு பேர்களும் மேற்படி இரண்டு சந்திப்புகளுக்கும் செல்லவில்லை. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் செல்லவில்லை. ஆனால் மூன்று கட்சிகள் சென்றன. அவை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பிரதிநிதிகளாக அங்கே செல்லவில்லை. ஆனாலும் அவர்கள் அவ்வாறுதான் சென்றார்கள் என்று வெளியில் நம்பப்படுகின்றது. ஏனென்றால் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுக் கட்டமைப்பை ஒரு கட்டமைப்பாக அணுகவில்லை என்றாலும் கூட, அது பொதுக் கட்டமைப்பு என்பதற்காகத் தான் அந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தும் பொதுக் கட்டமைப்பை அவர்கள் அழைத்தார்கள். தமிழ் பொது வேட்பாளர் அவர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியதே அதற்குக் காரணம். எனவே அந்த இரண்டு அழைப்புகளும் வெளிப்படையாக பொதுக் கட்டமைப்புக்கு என்று கூறப்படாவிட்டாலும், பொதுக் கட்டமைப்பை நோக்கியவை தான்.
இந்த அடிப்படையில் சிந்தித்தால், அந்த மூன்று கட்சிகளும் அந்த இரண்டு சந்திப்புகளுக்கும் போயிருக்கக் கூடாது.ஆனால் அதற்கு அவர்கள் கூறும் விளக்கம் என்ன ?
நாட்டில் உள்ள கட்சிகள் என்ற அடிப்படையில், நாட்டின் தலைவர் ஓர் அழைப்பை விடுக்கும் பொழுது சென்று சந்திப்பதுதான் அரசியல் நாகரீகம் என்று கூறப்படுகிறது. தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அழைக்கும் பொழுது அவர்கள் சென்று சந்திப்பது இயல்பானது. இம்மூன்று கட்சிகளில் இரண்டு கட்சிகளிடம் மொத்தம் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. எனவே அந்த அடிப்படையில் மேற்படி சந்திப்புகள் இடம்பெற்றதாக ஒரு விளக்கம் தரப்படுகின்றது.
பொதுக் கட்டமைப்பின் ஊடக அறிக்கை ஒரு பொதுக் கட்டமைப்பாக அந்த சந்திப்பில் தாங்கள் பங்குபற்றப் போவதில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டது.
மூன்று கட்சிகளும் பொதுக் கட்டமைப்பின் சார்பாகத் தங்கள் பங்குபற்றியதாகத் தெரிவிக்கவில்லை.
ஆனால்,பொதுக் கட்டமைப்பை விமர்சிப்பவர்கள் பொது வேட்பாளர் விமர்சிப்பவர்கள் அவ்வாறுதான் வியாக்கியானம் செய்கின்றார்கள். பொதுக் கட்டமைப்பு உடைந்து விட்டது, பொதுக் கட்டமைப்புக்குள் ஐக்கியம் இல்லை, அந்த மூன்று கட்சிகள் கூட்டுப் பொறுப்பின்றி நடந்து கொண்டு விட்டன,பொதுக் கட்டமைப்பில் உள்ள மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையில் உருகிப் பிணைந்த கூட்டு உருவாகவில்லை… என்றெல்லாம். விமர்சனங்கள் வருகின்றன
முதலில் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கிய கட்டமைப்பு தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு புதிய தோற்றப்பாடு.அவ்வாறு ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பொழுது அதற்கென்று ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதிக் கொண்டமையும் ஒரு புதிய தோற்றப்பாடுதான்.கடந்த 15 ஆண்டுகளாக பலரும் எதிர்பார்த்த;எழுதி வந்த ஒன்று.அது இப்பொழுது ஏறக்குறைய ஒரு மாதக் குழந்தைதான்.அதில் பலவீனங்கள் உண்டு.அங்கே தவறுகள் நடக்கும்.அங்கே முழுமையான கூட்டுப் பொறுப்பை, உருகிப் பிணைந்த இணைப்பை எதிர்பார்க்க முடியாது.அதைப் படிப்படியாகத்தான் ஏற்படுத்தலாம்.இவ்வாறு கட்சிகளையும் மக்கள் அமைப்பையும் இணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?
ஏனென்றால் தமிழர் அரசியலில் எல்லாமே சிதறிப் போய் இருக்கின்றன என்பதனால்தான், தமிழரசியலின் சீரழிவு காரணமாகத்தான் அவ்வாறு ஒரு கட்டமைப்பு தேவைப்பட்டது.தமிழரசியல் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சீரழிந்து வருகிறது.
தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்காக குடிமக்கள் சமூகங்கள் இன்று நேற்று உழைக்கவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக உழைத்து வருகின்றன.மறைந்த முன்னாள் மன்னார் ஆயரின் தலைமையில்,தமிழ் சிவில் சமூக அமையத்தில் இருந்து தொடங்கி இப்பொழுதுள்ள பொதுமக்கள் சபை வரையிலும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இந்தக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக விடாமல் முயற்சித்து வருகிறார்கள்.அதில் தற்காலிக வெற்றிகளை அவர்களால் பெற முடிந்திருக்கிறதே தவிர நிரந்தர வெற்றிகளைப் பெற முடியவில்லை.
இவ்வாறான ஒரு துர்பாக்கியமான அரசியல், சிவில் சமூகப் பின்னணியில், இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாதக் குழந்தையாகிய தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பும் ஒரு தற்காலிக வெற்றியாக மாறிவிடக்கூடாது என்ற கரிசனை குடிமக்கள் சமூகங்களுக்கு மட்டுமல்ல எல்லாத் தமிழ் மக்களுக்கும் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒற்றுமையைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு கிடையாது. ஒற்றுமை சிதைந்தால் அதை விட்டுவிட்டு வேறு ஒன்றை யோசிக்கலாம் என்று கூறுவதற்கு வேறு தெரிவே கிடையாது. தமிழ் மக்கள் ஒன்றுசேரத் தவறினால் தமிழ்க் கட்சிகளை ஒரு மையத்தில் ஒன்றிணைக்கத் தவறினால்,அது அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதை விடவும் ஆபத்தான விடயம் என்னவென்றால், தமிழ் மக்கள் ஒரு தூர்ந்து போகும் சமூகமாக மாறிவிடுவார்கள் என்பதுதான்.
எனவே தமிழ்ச் சமூகம் தூர்ந்து போய் ஒரு தேசமாக இல்லாமல் சிதறிப் போவதற்கு அனுமதிக்க முடியாது.அந்த அடிப்படையில் சிந்தித்தால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லா அரசியல் சக்திகளையும் தரப்புகளையும் ஐக்கியப்படுத்துவதுதான் ஒரே வழி. ஐக்கியம் இல்லையென்றால் தமிழ்த் தேசியமே இல்லை என்ற ஒரு விளிம்பில் இப்பொழுது தமிழ் அரசியல் வந்து நிற்கின்றது. அந்த அடிப்படையில்தான் ஒரு பொதுக் கட்டமைப்பு யோசிக்கப்பட்டது.
தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஆகக்கூடிய பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. அவ்வாறு மக்களை ஒரு பெரிய திரட்சியாகக் கூட்டிக்கட்டுவது என்று சொன்னால், அந்த மக்கள் மத்தியில் வேலை செய்யும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் கட்சிகளையும் கூட்டிக்கட்ட வேண்டும். அவ்வாறு கூட்டிக்கட்டத் தவறினால் தமிழ்ச் சமூகம் இப்பொழுது இருப்பதை விடவும் கேவலமான,பாரதூரமான விதத்தில் தூர்ந்து போய்விடும்.அவ்வாறு தூர்ந்து போகக்கூடாது என்பதற்காகத்தான் பொதுக் கட்ட்டமைப்பு.எனவே பொதுக் கட்டமைப்பு உடைய வேண்டும் என்று உழைப்பவர்கள் வெற்றி பெற்று விடக்கூடாது.
தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதை விரும்பாத சக்திகள் பொதுக் கட்டமைப்பு உடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்; விரும்புகிறார்கள்;அதற்காகக் காத்திருக்கிறார்கள்.அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் விதத்தில் ஒரு மாதக் குழந்தையான பொதுக் கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்த வேண்டுமா? அல்லது தமிழ் குடிமக்கள் சமூகங்கள் மேலும் தீவிரமாக,தீர்க்கதரிசனமாக;அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டியிருப்பதை அது காட்டுகின்றதா?
ஏனென்றால் இந்த இடத்தில் மனம் தளர்ந்தால்,இந்த இடத்தில் சோர்வடைந்தால், பிறகு தமிழ் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப எத்தனை ஆண்டுகள் செல்லும்? ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவை தோல்வியுற்ற பின் எட்டு ஆண்டுகள் சென்றன இப்படியொரு கட்டமைப்பை உருவாக்க.ஆரம்ப காலத்தில் ஏற்பட்டிருக்கும் சிறிய சறுக்கல்கள், தளம்பல்கள் போன்றவற்றை பொருட்படுத்தி பலவீனமான ஒரு ஐக்கியத்தை உடைப்பதா? அல்லது அதனை மேலும் பலப்படுத்தி உடைக்கப்பட முடியாத ஒன்றாக உருகிப் பிணைந்த ஒன்றாக வளர்த்தெடுப்பதா? என்ற கேள்விக்கு விடை முக்கியம்.தத்துவ ஞானி ஹெகல் கூறுவார் “வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்டது எதையென்றால்,நாம் வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்.இது தமிழ் அரசியலுக்கு குறிப்பாக பொதுக் கட்டமைப்புக்கும் பொருந்தும். அரசற்ற சிறிய ஒரு மக்கள் கூட்டம் எதிர்த் தரப்பு விரும்புவதை செய்ய வேண்டுமா அல்லது செய்யக் கூடாதா?
.