மட்டக்களப்பில் வீதியினை குறுக்கே கடக்க முயன்ற போது வான் மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் வாகரை பிரதான வீதியில் உள்ள பனிச்சங்கேணி பாலத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் வாழைச்சேனை, மீராவோடையைச் சேர்ந்த 8 வயதுடைய சப்பிறா மாஹீர் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சிறுவன் தனது தாய், தந்தையுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது பனிச்சங்கேணி பாலத்தில் முச்சக்கரவண்டியின் முன் விளக்கு எரியாது பழுதடைந்துள்ளது.
இதனையடுத்து வாகனத்தை பாலத்தில் நிறுத்தி அதனை தந்தை சரி செய்து கொண்டிருந்த நிலையில் நிலையில், தாய் முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி பாலத்தின் எதிர்பக்கமாக சென்று கையடக்க தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
இந் நிலையில் குறித்த சிறுவன் வீதியை கடந்து தாயாரிடம் செல்ல முற்பட்டபோது வாகரையை நோக்கி பிரயாணித்த டொல்பீன் ரக வான் சிறுவனை மோதியதையடுத்து படுகாயமடைந்த சிறுவன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வான் சாரதியை கைது செய்ததுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாணைகளை வாகரை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.