வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் 2 ஆவது நாளாக வடமாகாணத்தில் இன்றும் இடம்பெற்றுள்ளது. இதன்படி யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த குறித்த நடவடிக்கையின்போது கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் ,சங்கானை, காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வேலணை ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியவாறு விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.
2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் காணாமல் போனோர் தொடர்பாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களின் குடும்பங்களுக்கான விசாரணைகள் இன்று மாலை மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் காணாமல்போனவர்கள் தொடர்பாக இதுவரை பதிவு அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் இன்றைய தினம் பதிவுகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது,
குறிப்பாக 2009 ஆம் ஆண்டு யுத்தசூழ்நிலையி;ன் போது காணாமல்போனவர்கள் மற்றும் குறித்த காலகட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகாரணமாக காணாமல் போனவர்கள்தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.