25 ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் போலியோ பாதிப்பு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய காசா பகுதியில் தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தைக்கே போலியோ நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர். போர் காரணமாக காசாவில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையிலேயே 25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் போலியோ நோயை பதிவு செய்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் கழிவுநீரில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டதாகவும், ஒரு குழந்தைக்கு போலியோ அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் சந்தேகித்ததாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
இதனையடுத்து ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடத்தப்பட்ட சோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.