வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பொதுச் சேவைகளின் சரிவு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், சனிக்கிழமையன்று (17) பிரான்ஸ் முழுவதும் உள்ள நகரங்களில் கலவரங்கள் வெடித்தன.
பல தசாப்தங்களாக அந்நாடு கண்டிராத மிக மோசமான வன்முறைச் சம்பவங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது.
பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கானோர் தெருக்களில் அமைதியான முறையில் பேரணிகள் நடத்திப் போராட்டம் நடத்திய வேளையில், வன்முறைக் குழுக்கள் பொதுக் கட்டிடங்களைக் குறிவைத்து, ஆடம்பர ஆடை அங்காடிகளையும் பல்பொருள் அங்காடிகளையும் சூறையாடி, காவல்துறை வாகனங்களையும் அதிகாரிகளையும் தாக்கின.
லிமோஜெஸ் (Limoges) நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் பெரும் தீ விபத்தில் சிக்கி இடிந்து விழுந்தது.
உலகப் போர்களைக் கடந்து நின்ற அந்த வரலாற்றுச் சின்னம், 1873 இல் கட்டப்பட்டு 1883 இல் திறந்து வைக்கப்பட்டது.
இருப்பினும், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வெடித்த வன்முறை மோதல்களைத் தாங்கி நிற்க அது தவறிவிட்டது.
மார்சேயில், கருப்பு உடை அணிந்த போராட்டக்காரர்கள் நகர மண்டபத்திற்குள் நுழைந்து, அங்கு அநேக வாசகங்களை எழுதி கட்டிடத்தைச் சிதைத்தனர்.
லியோனில், போராட்டக்காரர்கள் நகரத்தின் சுற்றுலா அலுவலகத்திற்குத் தீ வைத்தனர்.
பிரெஞ்சு பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, வன்முறையைக் கண்டு அரசாங்கம் “அச்சமடையாது” என்று கூறினார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாக ஏற்பட்டுள்ள இந்த அமைதியின்மைக்கு, “தீவிர இடதுசாரிகள்” மற்றும் குற்றவாளிகளே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
மாலை வேளையில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட லெகோர்னு, போராட்டங்களின் ஒரு பகுதியாக சுமார் 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சுமார் 5,50,000 பேர் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் கூறினார்.
சிஜிடி (CGT) தொழிற்சங்கம், போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 80,000 இருக்கலாம் என்று தெரிவித்தது.
தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உறுதியளித்தார்.
இதவேளை, ஐரோப்பாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், பெல்ஜியம், போர்ச்சுகல் மற்றும் இத்தாலியிலும் சிறிய அளவிலான போராட்டங்கள் சனிக்கிழமையன்று நடைபெற்றன.
அதேவேளையில், அல்பேனியாவில் மக்கள் மீண்டும் ஒன்றுகூடி, அரசாங்க ஊழல், வேலையின்மை மற்றும் கல்வித் தரக் குறைபாடு ஆகியவற்றிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.














