தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டின் எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கண்டியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பலரும் போட்டியிடுகின்றனர்.பிரதான அரசியல் கட்சிகள் இன்று பிளவடைந்துள்ளன.
தேசியமக்கள் சக்தியினர் ஒரு போதும் இந்த நாட்டில் ஆட்சியமைக்க முடியாது. அதுமாத்திரமல்ல இந்த நாட்டின் எதிர்க்கட்சியாகவும் அவர்களால் செயற்பட முடியாது.
ஏனெனில் அவர்களிடம் நாட்டை முன்னேற்றுவதற்கான கொள்கை திட்டம் கிடையாது. கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் நூற்றுக்கு 55 வீத வாக்குப்பெரும்பான்மை தற்போது சஜித் பிரேமதாசவுக்கு உள்ளது.
நாட்டின் ஜனாதிபதி சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அதேபோல் பொதுஜன பெரமுனவும் சுயாதீனமாக செயற்படுகின்றனர்.
பொதுஜன பெரமுன இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றது. அவர்களின் பாதுகாவலனாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை பொறுப்பேற்றார்.
நாடு இன்று மேலும் கடன்சுமையை எதிர்கொண்டுள்ளது. இந்த நாட்டை பாதுகாப்பதற்கு சிறந்த தலைவர் சஜித் பிரேமதாசவே” என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தொிவித்தாா்.