அமெரிக்காவின், ஜோர்ஜியா மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நிலை பாடசாலையில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறார்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில், அப்பலாஜி என்ற இடத்தில் அமைந்துள்ள உயர்நிலைப் பாடசாலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 14 வயதுடைய கொல்ட் க்ரே எனும் மாணவன் என ஜோர்ஜியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நடத்திய தாக்குதலில் இரண்டு மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். அந்தவகையில், 14 வயதுடைய மேஷன் செமர்ஹோர்ன், 14 வயதுடைய கிறிஸ்டியன் எங்குலு, 39 வயதுடைய ரிச்சட் எஸ்பின்வால், மற்றும் 53 வயதுடைய கிறிஸ்டினா இரிமி ஆகியோரே இதில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்தத் தாக்குதலில் 9 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை அடுத்து குறித்த பாடசாலையின் பாதுகாப்பை பலப்படுத்திய பொலிஸார், அங்கிருந்து மாணவர்களை விரைவாக வெளியேற்றியதோடு, துப்பாக்கி தாரியையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் தொடர்ச்சியாக பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் கலாசாரம் தொடர்ந்து வரும் நிலையிலேயே, இந்தத் தாக்குதலும் இடம்பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்காவின் 45 பாடசாலைகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஆனால், இந்த சம்பவமே மிகவும் மோசமானது என்றும் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜோர்ஜியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை அமெரிக்காவில் 385 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.