தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற தலைவர்களுக்கு, நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை வழங்கக்கூடாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்குவதே தமது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தோட்ட மக்களுக்கு லயன்களுக்கு பதிலாக கிராமங்களில் வாழும் உரிமையை வழங்கி சட்டபூர்வமான காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டிருந்தார். இவ்விடயம் தொடா்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தொிவிக்கையில்,
இலங்கையில் ஒரேயொரு ஐக்கிய தேசிய கட்சியே உள்ளது. அதன் தலைவரான எனக்கே ஐக்கிய தேசிய கட்சியினர் ஆதரவளிக்க வேண்டும்.
நானும் சௌமியமூர்த்தி தொண்டமானும், ஒரே நாளில் தான் அமைச்சு பதவியேற்றோம். அவரோடு இணைந்து தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்திருக்கிறேன்.
தற்போது ஜீவன் தொண்டமானுடன் சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். தோட்டத்தில் முதியவர்களுக்கு அஸ்வெசும நிவாரணம் தருகிறோம்.
லயன்களை ஒழித்து கிராமங்களை உருவாக்குவோம். பிராஜவுரிமையை முழுமையாக வழங்க வழிவகை செய்திருகிறோம்.
சஜித் மற்றும் அனுரகுமார ஆகியோர் பொறுப்புகளை ஏற்க முடியாமல் ஓடிவிட்டு இப்போது எதற்காக வந்து அதிகாரம் கேட்கிறார்கள்.
நாம் கட்சி அரசியல் வேறுபாடுகளை விடுத்தே மக்களை மீட்க வழி செய்தோம். எதிர்கட்சியினர் மக்களை வாழவைப்பது குறித்து சிந்திக்கவில்லை.
தேர்தல் காலத்தில் மட்டுமே மக்களிடம் வருகிறார்கள். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா? அவர்களை “போடா, போடா” என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள்.
சஜித் எல்லாவற்றையும் இலவசமாக தருவதாகச் சொல்கிறார். தலைவலியையும் இலவசமாக தருவார். எல்லாவற்றையும் இலவசமாக தந்தால் நாட்டைக் கொண்டுச் செல்ல முடியுமா?
வரி குறைக்கப்படும், வரி வரம்பு அதிகரிக்கப்படும், விவசாய உபகரணங்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமாரவும் சொல்கிறார்.
ஐ.எம்.எப் உடன் இந்த திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்க அழைப்பு விடுத்தேன். இன்றுவரையில் அதற்கு தயாரில்லை.
மறுமுனையில் விவாதத்திற்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். நான் ஏற்றுக்கொண்டேன்.
இன்று வரை அதற்கான ஏற்பாடுகளை செய்து எனக்கு பதில் அழைப்பு விடுக்கவில்லை. விவாதத்திற்கு வர அநுரகுமார அச்சப்படுகிறாரா?” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தொிவித்தாா்.