பிரதான அரசியல் கட்சிகள் இன்று பிளவடைந்துள்ளமையினால் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் சவால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வேட்பாளராக முன்னிலையாதவதற்கு விரும்பாத காரணத்தினாலேயே ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
மொட்டுத்தரப்பினரும் அதேநிலையிலேயே உள்ளனர். சுயாதீனமாக தேர்தலில் முன்னிலையாகியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நான்காக பிளவடைந்துள்ளது. தயாசிறி தரப்பு மைத்ரிபால சிறிசேன தரப்பு விஜயதாச ராஜபக்ஷ தரப்பு நிமல்சிறிபால டீ சில்வா தரப்பு என 4 தரப்பினர் உள்ளனர்.
அரசியில் பிரதான கட்சிகள் பிளவடைந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே பிளவடையாமல் தேர்தலில் முன்னிலையாகியுள்ளது.
எமது தரப்பில் இருந்தும் ஓரிருவர் சென்றாலும் கூட கட்சிக்கு அதனால் பாதிப்பு இல்லை.பிரதான கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளமையினால் எமது கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளது.
பிரதான கட்சிகள் பிளவடைந்துள்ளமையினால் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்ததரப்பினரும் சவால் அல்ல.இந்த நிலையிலேயே தேசிய மக்கள் சக்தியினர் தங்களை ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலாக கருதுகின்றனர்.
சஜித் பிரேமதாசவை அநுரகுமார தோற்கடிப்பார் என ஜனாதிபதி கூறுகின்றார். தேர்தலில் தாம் வெற்றியடைவதை விடுத்து சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதே ஜனாதிபதியின் திட்டமாகும்” என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தொிவித்துள்ளாா்.