தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் இன்று பிற்பகல் நுகெகொடயில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அநுரகுமா திஸாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் வெற்றி உறுதியாகிவிட்டதாக தெரிவித்தார்.
எங்களுடைய வெற்றி குறித்து எவ்வித சந்தேகமும் தேவையில்லை.
நாங்கள் நிச்சியம் வெற்றிபெறுவோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க சூளுரைத்துள்ளார்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்கள் மாத்திரமல்லாது, வட, கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களும் எங்களுடைய வெற்றிக்கு முக்கிய பங்குதாரர்களாக இருப்பார்கள்.
தபால்மூல வாக்குகளில் 40 வீத தமிழ் அரச ஊழியர்களின் வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது. ஆகவே, 100 வருடங்களுக்கு பின்னர் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியானது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற ஆட்சியாக இருக்கும்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டிலுள்ள அனைவரும் சட்டத்திற்கு அடிப்பணிந்தவர்களாக மாற்றப்படுவார்கள். சட்டங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.
குற்றம் செய்தால் சட்டத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக, பழைய அனைத்து குற்றங்கள், கொலை குற்றவாளிகளுக்கு தேசிய மக்கள் சக்தியில் தண்டணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்.
பொருளாதார நெருக்கடி, எரிவாயு மற்றும் எரிபொருள் நெருக்கடியை ரணில் விக்கிரமசிங்கவே உருவாக்கினார்.
ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ அதில் சிக்கிக் கொண்டார்.
இந்த நிலையில், 21 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு நாட்டு மக்கள் எங்களை ஆட்சிக்கு கொண்டுவருவார்கள்.
எங்களால் டொலரை கொண்டுவருவும், அதனை பாதுகாக்கவும் எமக்குத் தெரியும் என்றும் இந்த நாட்டை எங்களால் கட்டியெழுப்ப முடியும் அவர் தெரிவித்தார்.
ரணில் விக்கரமசிங்க தனது ஓய்வு காலத்தை சிறப்பாக அனுபவித்துக் கொள்ளட்டும்.
எங்களுடைய வெற்றி குறித்து எவ்வித சந்தேகமும் தேவையில்லை. நாங்கள் நிச்சியம் வெற்றிபெறுவோம்.
அடுத்த இரு நாட்களில் அமைதியாக இருங்கள். எந்தவொரு வன்முறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். ஏனைய தரப்பினர் வன்முறைகளை ஏற்படுத்தினாலும் தங்களுடைய தரப்பில் அதில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் தங்களுடைய அதிகாரத்துக்கு அமைய நாட்டில் வன்முறைகள் ஏற்படுத்தவதற்கு இடமளிக்க வேண்டாம்.
மேலும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து 21 ஆம் திகதியுடன் ஆட்சியமைப்போம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.