நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக 11 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு திறைசேரியில் இருந்து ஜனாதிபதியினால் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் அரசியல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. அதேநேரம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இந்த விசேட உரையானது இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. மேலும், புதிய அரசாங்கத்தின் 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்களும் இன்று நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.