தனது 18 மாத பெண் குழந்தையை தாயொருவர் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவமொன்று கண்டி கலஹா, கஸ்தூரி லேண்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கண்டி, கலஹா கஸ்தூரி லேண்ட் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான பெண் ஒருவரே இந்தக் கொடூரச் செயலைப் புரிந்துள்ளார். குறித்த பெண் ஹொரணை பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றி வருவதாகவும் இவருக்கும் அவரது கணவருக்கும் இடையே தொடர்ந்தும் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று இரவு ஏழு மணியளவில் குழந்தை அழுதுள்ள நிலையில், குழந்தையை தூக்கிச் சென்ற குறித்த தாய், குழந்தையின் வாய், மூக்கு போன்றவற்றை அழுத்திப் பிடித்து சுவாசிக்க முடியாதவாறு செய்துள்ளார்.
பின் குழந்தையை தரையில் இறக்கிய அவர், குழந்தையை அடித்து தரையில் வீசியுள்ளார் என்று குறிப்பிடப்படுகிறது. இதனால், கீழே விழுந்த குழந்தை எழுந்து சில அடிகள் நடந்து கதவின் அருகின் விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் கொடூரம் என்னவென்றால், இந்தத் காட்சிகள் அனைத்தையும் குறித்த பெண், தனது கையடக்கத் தொலைப்பேசியில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் பதிவு செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
சம்பவம் நடந்து மூன்று மணித்தியாலங்களின் பின்னர் அயல் வீட்டார் வந்து குழந்தையை கலஹா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அந்தப் பிச்சுக் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணம் தொடர்பாக கலஹா வைத்தியசாலை பொறுப்பதிகாரி ருவன் ரவீந்திரநாத் பொலிஸாருக்கு தெரியப்படுத்திய நிலையில், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்ஷிகா என்ற 21 வயதுடைய தாயொருவரே இந்த செயலை மேற்கொண்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு உடலை பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.