புதிய பாதுகாப்பு செயலாளருக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட டிபெண்டர் ரக ஜீப் வாகனம் இன்று அதிகாலை, நாடாளுமன்ற வீதியில் ஜயந்திபுர பிரதான நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இராணுவத்திற்கு சொந்தமான குறித்த டிபென்டர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. நாடாளுமன்ற வீதியில் ஜயந்திபுர பிரதான நுழைவாயிலுக்கு அருகிலேயே இன்று அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலவத்தையில் இருந்து நாடாளுமன்ற வீதியின் ஊடாக பொரளை நோக்கிப் பயணிக்கும்போதே குறித்த டிபென்டர் வாகனம் சதுப்பு நிலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எச். எஸ். சம்பத் துய்யகொந்தாவை அமைச்சிலிருந்து அழைத்து வருவதற்காக பொல்துவ நோக்கிச் சென்ற போதே குறித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும், விபத்து நடந்த போது, பாதுகாப்பு செயலாளர் அந்த வாகனத்தில் இல்லை என்றும் டிபென்டர் வாகனத்தின் சாரதி மட்டுமே குறித்த நேரத்தில் இருந்துள்ளார் என்றும் ஆனால், அவருக்கு காயங்கள் ஏதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவத்தினரின் உதவியுடன் சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் இராணுவ வாகனம் சதுப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.