சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரின் மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம், ISS உடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.
க்ரூ-9 பணியின் ஒரு பகுதியான க்ரூ டிராகன் விண்கலம், நாசாவின் நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரை ஏற்றிக்கொண்டு புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளிப் படை நிலையத்தில் இருந்து சனிக்கிழமை (28) ஏவப்பட்டது.
விண்கலம் அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை சுமார் மாலை 5:30 (ET) மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த ஒன்பது விண்வெளி வீரர்களுடன் ஹேக் மற்றும் கோர்புனோவ் இணைந்ததால், ISS இன் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ள சுனிதா வில்லியம்ஸ், புதிய நபர்களை வரவேற்றார்.
வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் நீண்ட காலம் தங்கியிருப்பது போயிங் ஸ்டார்லைனரில் தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்ய அவசியமானது.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் பாதுகாப்புக் கவலைகள் காரணமாக 2024 ஜூன் மாதம் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களும் முதலில் மிகக் குறுகிய காலம் தங்குவதற்கு திட்டமிட்டனர்.
இறுதியாக பல மாத காத்திருப்புக்குப் பின்னர், நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 2025 பெப்ரவரியில் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் காப்ஸ்யூலில் பூமிக்குத் திரும்புவார்கள் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.