அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ராஸ் அடேரின் அற்புதமான சதத்தின் உதவியுடன் அயர்லாந்து தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து வரலாறு படைத்தது.
சயீத் கிரிக்கெட் மைதாத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை எடுத்தது.
ரோஸ் அடேர் 58 பந்துகளில் 5 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடங்கலாக அயர்லாந்து சார்பில் அதிகபடியாக 100 ஓட்டங்களை எடுத்தார்.
பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது. இதனால், அயர்லாந்து 10 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆண்கள் டி20 போட்டியில் அயர்லாந்து அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
இந்த வெற்றியின் மூலம் இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரினையும் அயர்லாந்து 1:1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் புதன்கிமை அபுதாபியில் ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.