வவுனியா ஆண்டியா புளியங்குளம் பகுதியில் வசித்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சவூதி அரேபியாவில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத் தருமாறு அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பாக வேலை விசாவில் சவூதி அரேபியாவுக்கு சென்ற 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஆண்டியா புளியங்குளம் பகுதியில் வசித்த குறித்த பெண், அநுராதபுரத்தில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாகவே சவூதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் இறந்து 15 நாட்களின் பின்னரே இந்தத் தகவல் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது குறித்த பெண் உயிரிழந்து 40 நாட்களைக் கடந்துள்ள போதிலும், தனது மனைவியின் உடலை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சவூதிக்கு சென்ற நாளிலிருந்து சாதாரண தொலைபேசி வாயிலாகவே தனது மனைவி தன்னோடு உரையாடினார் என்றும் இதனால் அவரது முகத்தை கூட தாங்கள் பார்க்கவில்லை என்றும் கணவன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கடந்த சில நாட்களாக தனக்கு அங்கு சித்திரவதை இடம்பெறுவதாகவும் தன்னை உடனடியாக நாட்டுக்கு திருப்பி எடுக்கமாறும் தனது மனைவி கூறினார் என்றும் இது தொடர்பாக பல தடவை அவரை அனுப்பிய முகவரிடம் கூறியும் உரிய பதிலை அவர் தரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனது மனைவி தன்னோடு தொலைப்பேசியில் உரையாடாத காரணத்தினால், முகவரிடம் சம்பவம் தொடர்பாக கேட்கப்பட்டபோது, மனைவிக்கு சுகயீனனம் என தெரிவிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டுள்ள கணவன் கூறியுள்ளார்.
இதனையடுத்து தற்போது தனது மனைவி உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
எனவே, இந்த விடயத்தில் தனது மனைவியின் உடலை நாட்டுக்கு கொண்டுவருவதோடு மட்டுமன்றி, உரிய சட்ட நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உயிரிழந்துள்ள பெண்ணின் கணவன் வலியுறுத்தியுள்ளார்.